Purchase @ Amazon

Saturday, October 8, 2022

பொன்னியின் செல்வனும் ரகுமான் இசையும்



வரலாற்று திரைபடத்தில் ரஹ்மானின் இசை என்பது புதிதல்ல , கடந்த 30 ஆண்டுகளில் ரஹ்மான் பணிபுரிந்த வரலாற்று படங்கள், வரலாறு சார்ந்த புனைவு  கதைகள் , வரலாற்று நாயகர்களின் வாழ்கை குறித்த திரைப்படங்கள் , மொத்தம் 22  , இதில் பொன்னியின் செல்வனும் அடங்கும் . 1997ல் இருவர்  2001இல் வெளிவந்த லகான் படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த ஹிந்தி திரை உலகமும் வரலாற்று படங்கள் என்றால் ரஹ்மானிடம் தஞ்சம் புகுந்தனர் . அதற்கு மிகப்பெரும் காரணம் வரலாற்று படங்களை ரஹ்மான் கையாளும் விதம் , இது போன்ற கதைகளுக்கு இசை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது ரஹ்மான் நன்கு அறிவார் எனவே அதற்கு அவர் எடுத்து கொண்ட காலமும் , மெனக்கெடல்களும் ஏராளம் , இசை கருவிகள்  தெரிவு செய்வது , இசை கோர்ப்பு. பாடல் வரிகள் , பாடகர்கள் ,போன்ற ஒவ்வொன்றும் பலகட்ட உரையாடல்கள் , புத்தக குறிப்புகள் , கதை சார்ந்த நிலத்தில் பயணங்கள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுக்கு பின்னரே இசை பணியை தொடர்வார் குறிப்பாக தனது பாடல்களில்  ராகங்களை பயன்படுத்தும் விதம் , முழுவதுமாக ராகத்தில் அமைத்து விட்டால் கேட்பவர் பொறுமை இழக்க கூடும் எனவே அதை சம காலத்தில் கேட்பவருக்கு சலிப்பு இல்லாத வண்ணம் எப்படி கோர்த்து வழங்கலாம் என்ற கூடுதல் கவனம் ரஹ்மானிடம் எப்பொழுதுமே இருக்கும் .

10 ஆம் நூற்றாண்டு என்பது நமக்கு கற்பனை மட்டுமே , பழங்கால ராகங்கள் ,இசை கருவிகள் , மெட்டுக்கள் மட்டுமே வைத்து கொண்டு ஒரு முற்றிலுமாக பழமை இசையை அமைத்தாலும் இன்று முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த கால பார்வையாளர்களை 3 மணிநேரம் பிடித்து வைப்பது அதிலும் கடினம் .
பொன்னியின் செல்வனில் ரஹ்மான் செய்த மேஜிக் என்பது பழமையான ராகங்கள் , வரிகள் மட்டும் எடுத்துகொண்டு அதை தனக்கே உரித்தான  Contemporary பாணியில் இசை வழங்கி உள்ளார் .
கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையில் பழங்கால இசையை மட்டுமே இல்லாமல்  புது இசையை வேறு பாணியில் புகழ் பெற்ற ‍ pirates of the Caribbean படத்தில் Hans Zimmer  அணுகினார் அங்கேயே அந்த படத்தின் பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது உலகம் அறிந்ததே .
அதே தான் ரஹ்மானும் பொன்னியின் செல்வனில் செய்து காட்டியிருக்கிறார் , பின்னணி இசையில் மிரட்டி இருந்தார் ரஹ்மான் .


காட்சிகள்
ஆதித்ய கரிகாலனும் பாண்டியனும் :
ஆதித்ய கரிகாலன் ஆழ்ந்த சோகத்தில் நந்தினி குறித்து நண்பனிடம் விளக்கும் காட்சி,  பின்னணி இசை மெல்லிய  குரலில் ஆரம்பித்து பின்னர் சோழா சோழா பாடலுடன் பயணிக்கிறது , அங்கிருந்து துவங்கி கரிகாலன் பாண்டிய மன்னனை தேடி சென்று அவனது இருப்பை கண்டறிந்து ,  தங்கியிருந்த குடிலின் கதவை திறக்கும் வரை பின்னணியில் ஒலிக்கும் Broadway musical பாணியில் வரும் வயலின்களின் முழக்கமும் காட்சி உச்சம் சென்று கரிகாலன் பாண்டியன் தலையை கொய்யும் சமயத்தில் பின்னணி இசை வேறொரு தளத்தில் வயலின் மற்றும் OPERA ஒலியுடன் உடன் கலந்து விருந்து கொடுத்திருப்பார் ரஹ்மான் . Opera போன்ற சர்வேதச ஒலியை இந்த சரித்திர படத்தில் நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை , அதை காட்சிக்கு நெருக்கமாக தந்து மிரள வைத்துள்ளார் ரஹ்மான் .

இலங்கையில் அருண்மொழி வர்மன் :
முதல் காட்சியே போர்க்களம் அதை தொடர்ந்து வரும் வெற்றியும் ,முழுக்க முழுக்க Brass மற்றும் percussions யை மையப்படுத்தி வரும் பின்னணி இசை அதகளம் .

நந்தினியும் குந்தவையும் :
படத்தின் மிக முக்கியமான நிகழ்வாக தோன்றும் இந்த காட்சிக்கு ரஹ்மான் நமக்கு ஒரு ஆச்சர்யத்தை வைத்திருந்தார் , " தோடி " என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி ராகதை பயன்படுத்தி ஒரு பின்னணி இசையை கோர்த்து அதில் நகுல் அப்யங்கரை "சாய சஞ்சலே " என்று பாட வைத்திருப்பார் , இதற்கு முன் Delhi 6 படத்தில் Bhor bhayee என்ற பாடலில் இதே ராகத்தை பயன்படுத்தி இருப்பார் அதில் ஒரு உள்ளார்ந்த சோகம் கலந்திருக்கும் , ஆனால் இந்த காட்சியில் அப்படியே ஒரு வேறு வகையான உணர்ச்சியை கடத்தியிருப்பார் ரஹ்மான் . ரஹ்மான் மேஜிக்.

குந்தவை தேவியும் வந்திய தேவனும் :
இருவரும் சந்திக்கும் இந்த 6 நிமிட காட்சி ஒரு கவிதை போல் இருக்கும் . புராணத்தில் நடராஜரை காண சென்ற பதஞ்சலி முனி நந்தியால் அனுமதி மறுக்க பட்ட பொழுது ,  உடனே  முனி , நடராஜரை போற்றி பாடி நடராஜரின் தரிசனம் பெரும் அந்த நடராஜர் வரிகளை ரஹ்மான் வந்தியத்தேவன் குந்தவையை சந்திக்கும் காட்சியில் அழகாக மெல்லிசையோடு தொகுத்து வழகியிருப்பார் , போர்களமும் , அரசியலும் ,வஞ்சமும் கொண்ட கதையில் இந்த காட்சியை மணிரத்னம் ,ரஹ்மான் இருவரும் ஒரு கவிதையாக வடித் திருப்பார்கள் . காட்சியின் முடிவில் வரும் பின்னணியில் ஒலிக்கும் "அக நக " என்ற பாடல் அது ரஹ்மான் மேஜிக்.

சமுத்திர குமாரி பூங்குழலி :
கடலின் ராணியாகவே இருக்கும் பூங்குழலி அவளது உள்ளார்ந்த உணர்வுகளை ஒரு பாடலில் சொல்ல ரஹ்மான் பயன்படுத்திய ராகம் "சமுத்திர பிரியா"  திரை இசையில் மிகவும் அரிதாக பயன் படுத்த பட்ட ராகம் இது . இசை ஞானி இளையராஜா வின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் வரும் "கண்ணம்மா " பாடலில்  கடைசியாக கேட்டது . நெய்தல் நிலத்தில் வாழும் பூங்குழலியின்  உணர்சிகளை "அலைகடல் " என்ற மெல்லிசையோடு கடத்தி இருப்பார் தலைவன் ரஹ்மான்.


வானதியின் ஓலையும் அருண்மொழி வர்மனும் :
ஏழாம் நூற்றாண்டின் தேவாரம் தொகுப்பில் திருஞானசம்பந்தர் எழுதிய " காடுடை சுடலை நீற்றர் "பாடலில்   "காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்"  என்னும் வரிகளை அருண்மொழி வர்மன் வானதியின் ஓலையை படிக்கும் காட்சியில் இசை வடிவில் அழகாக வழங்கியிருந்தார் .

இறுதி காட்சி :
இறுதி சண்டை காட்சியில் வரும் பின்னணி இசை உலக தரம் , சண்டை முடிந்து வரும் பின்னணி பாடல் , பேரலைக்கு பின் காட்சியளிக்கும் கடல் போல மனதிற்குள் ஒரு அமைதியை நிலவச்செய்யும் .

படத்தின் OST காக காத்திருக்கிறேன் Rahman Sir.

Credits: Udhayan VP (Rahman Sir Fan)

No comments:

Post a Comment