Purchase @ Amazon

Tuesday, October 11, 2022

'உன்ன நினச்சதும்' பாடல் பற்றி கவிஞர் தாமரை கூறியது என்ன?

'உன்னை நினைச்சதும்' பாடல்

  வெந்து தனித்தது காடு படத்தில் நானெழுதிய இன்னுமொரு பாடல் இங்கே உங்களுக்காக.

   நான் பாடல் வரிகள் தருவதற்குள் பாடலின் காணொலியே இன்று வந்து விட்டதால் அதையே தருகிறேன். படம் பார்க்காதவர்கள் இதைப் பார்க்காமல் தவிர்க்கலாம். 
  
   நாயகியும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். மும்பைவாசி. வீட்டுசூழ்நிலை, நெருக்கடி, அன்பில்லாத நிலை எல்லாம் சேர்ந்து அவளைத் தனிமைப் படுத்தியிருக்கின்றன. நாயகன் தன்னைப் பின்தொடர்வது அவளுக்குத் தெரியும். அவன்மேல் காதலெல்லாம் இல்லை, ஆனால் இந்தக் காட்சியில்தான் அது மெல்லமெல்லத் தொடங்கும். என் வரிகள் அப்படித்தான் அமைந்திருக்கும். காட்சியை விட்டு விலகாமலிருக்கும். 

     கௌதம் கதை சொல்லும் போதே இப்படியொரு பாடல் வரும் என்று சொல்லியிருந்தார். இருவரும் பேசிக் கொள்வது போல் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இரவு நேரம் தொலைவில் எங்கிருந்தோ ஒரு பழைய பாடல் காற்றில் தவழ்ந்து வரலாம், அதை இவர்கள் தொடர்வது போல் வைத்தால் கவித்துவமாக இருக்குமில்லையா என்றார். பி.சுசீலா பாடல், பழைய பாடல் என்றதும் எனக்குக் கேட்கவா வேண்டும்... நான் ஏதேதோ கற்பனையில் விழுந்து எனக்குப் பிடித்த எண்ணற்ற பி.சு.பாடல்களை அடுக்க ஆரம்பித்தேன்... அதெல்லாம் இல்லை, கொடியசைந்ததும் தான் இரகுமான் சார் தேர்ந்தெடுத்திருக்கார், அதைப் பத்தி யோசிங்க என்றார்... (எனக்கும் அது பிடித்த பாடல்தான்)... 

  பிறகு கோவிட் வெருவி காலம்... யாரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இரகுமான் அவர்கள் திடீரென்று ஓரிரவு ட்சூம் வழியாக வந்தார், கௌதமும் இணைந்தார்... பேசிப்பேசியே பாடல் சூழல் உருவானது. எடுத்த எடுப்பிலேயே முத்தம் கேட்பது வேண்டாம் கௌதம் என்றேன், இல்லையில்லை பாடலுக்கு முந்தைய உரையாடலிலேயே அது வந்து விடும், எனவே தப்பாகத் தெரியாது என்றார். எனவேதான், 'மனசு மயங்கிதான் முத்தம் கேட்டது' என்று எழுதி, நாயகன் தடாலென்று முத்தம் கேட்ட அதிர்ச்சியை சமன் செய்தேன் 
   அதன்பிறகு என் வழக்கமான பல்லவியை இரகுமான் அவர்களிடம் ஆரம்பித்தேன், மெட்டு மறந்திரும், எனக்கு சரியா தத்தகாரத்தில போட்டு மெட்டு அனுப்புங்கன்னு...
   
    பிறகு அடுத்தநாள் பல்லவி மெட்டு மின்னஞ்சலில் வந்தது. நான் எழுதி அனுப்பி, பல நாட்களுக்குப் பிறகே சரணம் மெட்டு வந்தது.. கௌதமுக்கு நான் எழுதிய வரிகள் மிகமிகப் பிடித்திருந்தது. அப்படியே போய்ப் பதிவு பண்ணிருங்க என்றார்.

   அதன்பிறகு பல மாதங்கள் கழித்தே பாடல்பதிவு நடந்தது. வேறு சிலர் பாட, பதிவு செய்து அனுப்பினேன் ( இரகுமான் துபாயில், கௌதம் படப்பிடிப்பில் ). இறுதியாக மீண்டும் ஸ்ரேயா கோஷல், சர்தக் கல்யாணி பாடினார்கள். ஸ்ரேயா பாடியது எனக்குத் தெரியாது, இங்கு வந்து பாடினாரா அல்லது அவருடைய இடத்திலிருந்து பாடினாரா என்று தெரியவில்லை. பாடலை எனக்கு  உதவியாளர்கள் அனுப்பினார்கள். திருத்தங்கள் சொன்னேன், குறித்துக் கொண்டு சரிசெய்து மீண்டும் அனுப்பினார்கள். அவ்வளவு அழகாக இருந்தது. சர்தக் புதிய பாடகர், கோப்ராவில் 'தரங்கிணி' பாடியவர், தமிழ் தெரியாது, அவரோடு இரண்டு இரவுகள் தமிழ் சொல்லிக் கொடுத்து பாடல் பதிவு செய்து இரகுமான் அவர்களுக்கு அனுப்பினோம் (இரகுமான் இப்போது அமெரிக்காவில்). 
    ஆக, 10 மாதங்கள் விட்டு விட்டு நடந்தது இந்தப் பாடல் பணி. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

இனி பாடல் வரிகள் : 
Unnai Ninaichadhum Lyrics:

படம்  :           வெந்து தணிந்தது காடு
இயக்கம்  : கௌதம் வாசுதேவ் மேனன்
இசை     :     ஏ ஆர் இரகுமான் 
பாடல்  ஆசிரியர்  :      தாமரை 
பாடகர்கள்    :   ஷ்ரேயாகோஷல், சர்தக்
                                 கல்யாணி
நடிப்பு   :       சிம்பு, சித்தி இட்னானி
காட்சி   :       காதலை வெளிப்படுத்துதல்
தயாரிப்பு   :    வேல்ஸ் திரைநிறுவனம் 

முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் 

பல்லவி

ஆண் :

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே 
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !
 
பெண் : 

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... 
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...
 
ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

பெண் ; 

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !
பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! 
நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் : 

நேசங்களால் கைகள் இணைந்ததே !
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !
தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! 

ஆண் : 

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

சரணம்:

ஆண் :

மழை வருகிற மணம் வருவது 
எனக்கு மட்டுமா ? 
தனிமையில் அதை முகர்கிற சுகம் 
உனக்கும் கிட்டுமா ? 

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல் 
எனக்கு மட்டுமா ?
மழையென வரும் மரகதக்குரல் 
சுவரில் முட்டுமா ?

ஆண் : 

எனது புதையல் மணலிலே...
கொதிக்கும் அனலிலே !
இருந்தும் விரைவில் கைசேரும் 
பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே ! 
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ! 
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே..!

பி.கு :  

1.  இருபுறம் மதில் என்பதுதான்,  பாடும்போது ம கரைந்து'அதில்' என்று கேட்கிறது.  இந்தக் குறையை கவனித்து முன்பே வேறு வரிகள் எழுதிக் கொடுத்திருந்தேன். தடக்குரலில் அது இல்லாததாலும், ஷ்ரேயா பாடியது எனக்குத் தெரியாததாலும் முன்பிருந்த வரிகளை வைத்து படப்பிடிப்பு நடந்து விட்டதாலும் மாற்று வரிகளைப் பயன்படுத்த முடியவில்லை. 

2.  பொதுவாக இவ்வளவு விவரங்கள் முகநூல்  பதிவில் கொடுக்க மாட்டேன். பாடல்கள் வெற்றி பெற்றுள்ளதால் பலரும் பேட்டி கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்கும் சூழல் இல்லாததால் இங்கே சற்றே கூடுதல் தகவல்கள்... இரசிக நெஞ்சங்களை எண்ணி...

Credits: Kavingnar Thamarai 

'மல்லிப்பூ' பாடல் பற்றி கவிஞர் தாமரை கூறியது என்ன?

மல்லிப்பூ பாடல்

 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல்  பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி 

 இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது.  இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று!

   பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு! கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், இரகுமான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது! 

   படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா? இந்த வகைப் பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம். 

 முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் ! விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்.

படம் :  வெந்து தணிந்தது காடு
இயக்கம்  :   கௌதம் வாசுதேவ் மேனன்
இசை :   ஏ. ஆர். இரகுமான்
பாடல் வரிகள்  : தாமரை
பாடகி  :   மதுஸ்ரீ 
நடிப்பு   : சிலம்பரசன் & குழு
காட்சி  :   பிரிவுழல்தல், தொலைதூர உறவு
தயாரிப்பு  :  வேல்ஸ் திரைநிறுவனம் 

மல்லிப்பூ பாடல் வரிகள் : 
Mallipoo Lyrics:

பல்லவி 

ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு 
வாடுதே ...
அந்த வெள்ளி நிலா 
வந்து வந்து தேடுதே ...
மச்சான் எப்போ 
வரப் போறே ?
மச்சான் எப்போ 
வரப் போறே ?
பத்து தலைப் பாம்பா வந்து 
முத்தம் தரப் போறே ?

நான் ஒத்தையிலே தத்தளிச்சேன்...
தினம் சொப்பனத்தில் மட்டும்தான் 
உன்னை நான் சந்திச்சேன்...
ஏ... எப்போ வரப் போறே..? 
மச்சான் எப்போ வரப் போறே ? 
பத்தமடைப் பாயில் வந்து 
சொக்கி விழப் போறே ?

 சரணம் 1

 வாசலைப் பார்க்கிறேன் 
கோலத்தைக் காணோம் ! 
வாளியை சேந்துறேன் 
தண்ணியைக் காணோம் ! 
சோலி தேடிப் போனே 
காணாத தூரம்.... 
கோட்டிக்காரி நெஞ்சில் 
தாளாத பாரம்...

காத்திருந்து காத்திருந்து 
கண்ணு பூத்திடும் ! 
ஈரமாகும் கண்ணோரம் 
கப்பல் ஆடும் ..!

சரணம் 2 

தூரமாப் போனது 
துக்கமா மாறும் ...
பக்கமா வாழ்வதே 
போதுன்னு தோணும் ! 
ஊரடங்கும் நேரம் 
ஓர் ஆசை நேரும் !
கோழி கூவும் போதும் 
தூங்காம வேகும் !

அங்கு நீயும் இங்கு நானும் 
என்ன வாழ்க்கையோ..! 
போதும் போதும் 
சொல்லாமல் வந்து சேரும் !

கடைசிப் பல்லவி.

ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே !
அந்த வெள்ளி நிலா
வந்து வந்து தேடுதே ! 
மச்சான் எப்போ வரப் போறே ?
மச்சான் எப்போ வரப் போறே? 
உத்தரத்தப் பார்த்தே நானும் 
மக்கிவிடப் போறேன்..!

 அட எத்தனை நாள் 
ஏக்கம் இது ...
பெரும் மூச்சுல 
துணிக்கொடி ஆடுது 
துணி காயுதே !

கள்ளக்காதல் போல 
நான் மெல்லப் பேச நேரும் !
சத்தம் கித்தம் கேட்டால் 
பொய்யாகத் 
தூங்க வேணும் !

மச்சான் எப்போ வரப் போறே ?
மச்சான் எப்போ வரப் போறே ?
சொல்லிக்காம வந்து என்னை 
சொக்க விடப்போறே ???

பி.கு :   சேந்துகிறேன் என்றால் கிணற்றிலிருந்து நீர் இறைப்பது ( Drawing water from a well ). கிராமங்களில் இயல்பாகப் புழக்கத்தில் இருக்கும் சொல்தான். பேச்சு வழக்கில் இங்கே 'சேந்துறேன்' என்று பாட வேண்டியது. 
    
Credits: Kavingnar Thamarai

'ஈஆரிஎசமாரி' எவ்வளவு அழகான அர்த்தம் தெரியுமா?

பொன்னி நதி பார்க்கணுமே.. ஈஆரிஎசமாரி..
ஈ + ஆரி + எச + மாரி.. எவ்வளவு அழகான அர்த்தம் தெரியுமா?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலில் வரும் 'ஈ ஆரி எச மாரி' என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை அறிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள்.

உலகில் தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற சிறப்புகளும், உயர்வுகளும் இருக்கிறது என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

தமிழை பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும், எழுத்துக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது என்றே கூறலாம்.

பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. பொன்னி நதி பார்க்கணுமே.. ஈ ஆரி எச மாரி என வரும் அந்தப் பாடலில் 'ஈ ஆரி எச மாரி' என்றால் என்ன அர்த்தம் என்று யாராவது சிந்தித்துள்ளீர்களா. இதன் அர்த்தத்தை அறிந்தால் நீங்களே அசந்துபோவீர்கள்.

வில் வீரனின் இசை மழை
தமிழை பொறுத்தவரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தத்தை காணலாம். ஐ என்றால் அழகு, கோ என்றால் அரசன், மா என்றால் மாடு என பல சிறப்புகளை தமிழ் மொழி பெற்றிருக்கிறது.

அந்த வகையில்

என்றால் ஈட்டி, வில் என்பதை குறிக்கும்.

ஆரி என்றால் வீரன் என்று பொருள்.

எச என்றால் இசை.

மாரி என்றால் மழை.

மொத்தத்தில் ஈஆரிஎசமாரி என்றால் 'வில் வீரனின் இசை மழை' என்று அர்த்தம்.

இப்போது புரிகிறதா அந்தப் பாடலில் இந்த வார்த்தையை ஏன் சேர்த்தார்கள் என்று.

தமிழை பொறுத்தவரை எதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படி ஒரு தனிச்சிறப்பு மிக்க மொழி நம் தமிழ் மொழி. சமீபநாட்களாக தமிழ் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் தமிழின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு பாடலை இயற்றி நம்மை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.

Saturday, October 8, 2022

பொன்னியின் செல்வனும் ரகுமான் இசையும்



வரலாற்று திரைபடத்தில் ரஹ்மானின் இசை என்பது புதிதல்ல , கடந்த 30 ஆண்டுகளில் ரஹ்மான் பணிபுரிந்த வரலாற்று படங்கள், வரலாறு சார்ந்த புனைவு  கதைகள் , வரலாற்று நாயகர்களின் வாழ்கை குறித்த திரைப்படங்கள் , மொத்தம் 22  , இதில் பொன்னியின் செல்வனும் அடங்கும் . 1997ல் இருவர்  2001இல் வெளிவந்த லகான் படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த ஹிந்தி திரை உலகமும் வரலாற்று படங்கள் என்றால் ரஹ்மானிடம் தஞ்சம் புகுந்தனர் . அதற்கு மிகப்பெரும் காரணம் வரலாற்று படங்களை ரஹ்மான் கையாளும் விதம் , இது போன்ற கதைகளுக்கு இசை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது ரஹ்மான் நன்கு அறிவார் எனவே அதற்கு அவர் எடுத்து கொண்ட காலமும் , மெனக்கெடல்களும் ஏராளம் , இசை கருவிகள்  தெரிவு செய்வது , இசை கோர்ப்பு. பாடல் வரிகள் , பாடகர்கள் ,போன்ற ஒவ்வொன்றும் பலகட்ட உரையாடல்கள் , புத்தக குறிப்புகள் , கதை சார்ந்த நிலத்தில் பயணங்கள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுக்கு பின்னரே இசை பணியை தொடர்வார் குறிப்பாக தனது பாடல்களில்  ராகங்களை பயன்படுத்தும் விதம் , முழுவதுமாக ராகத்தில் அமைத்து விட்டால் கேட்பவர் பொறுமை இழக்க கூடும் எனவே அதை சம காலத்தில் கேட்பவருக்கு சலிப்பு இல்லாத வண்ணம் எப்படி கோர்த்து வழங்கலாம் என்ற கூடுதல் கவனம் ரஹ்மானிடம் எப்பொழுதுமே இருக்கும் .

10 ஆம் நூற்றாண்டு என்பது நமக்கு கற்பனை மட்டுமே , பழங்கால ராகங்கள் ,இசை கருவிகள் , மெட்டுக்கள் மட்டுமே வைத்து கொண்டு ஒரு முற்றிலுமாக பழமை இசையை அமைத்தாலும் இன்று முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த கால பார்வையாளர்களை 3 மணிநேரம் பிடித்து வைப்பது அதிலும் கடினம் .
பொன்னியின் செல்வனில் ரஹ்மான் செய்த மேஜிக் என்பது பழமையான ராகங்கள் , வரிகள் மட்டும் எடுத்துகொண்டு அதை தனக்கே உரித்தான  Contemporary பாணியில் இசை வழங்கி உள்ளார் .
கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையில் பழங்கால இசையை மட்டுமே இல்லாமல்  புது இசையை வேறு பாணியில் புகழ் பெற்ற ‍ pirates of the Caribbean படத்தில் Hans Zimmer  அணுகினார் அங்கேயே அந்த படத்தின் பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பது உலகம் அறிந்ததே .
அதே தான் ரஹ்மானும் பொன்னியின் செல்வனில் செய்து காட்டியிருக்கிறார் , பின்னணி இசையில் மிரட்டி இருந்தார் ரஹ்மான் .


காட்சிகள்
ஆதித்ய கரிகாலனும் பாண்டியனும் :
ஆதித்ய கரிகாலன் ஆழ்ந்த சோகத்தில் நந்தினி குறித்து நண்பனிடம் விளக்கும் காட்சி,  பின்னணி இசை மெல்லிய  குரலில் ஆரம்பித்து பின்னர் சோழா சோழா பாடலுடன் பயணிக்கிறது , அங்கிருந்து துவங்கி கரிகாலன் பாண்டிய மன்னனை தேடி சென்று அவனது இருப்பை கண்டறிந்து ,  தங்கியிருந்த குடிலின் கதவை திறக்கும் வரை பின்னணியில் ஒலிக்கும் Broadway musical பாணியில் வரும் வயலின்களின் முழக்கமும் காட்சி உச்சம் சென்று கரிகாலன் பாண்டியன் தலையை கொய்யும் சமயத்தில் பின்னணி இசை வேறொரு தளத்தில் வயலின் மற்றும் OPERA ஒலியுடன் உடன் கலந்து விருந்து கொடுத்திருப்பார் ரஹ்மான் . Opera போன்ற சர்வேதச ஒலியை இந்த சரித்திர படத்தில் நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை , அதை காட்சிக்கு நெருக்கமாக தந்து மிரள வைத்துள்ளார் ரஹ்மான் .

இலங்கையில் அருண்மொழி வர்மன் :
முதல் காட்சியே போர்க்களம் அதை தொடர்ந்து வரும் வெற்றியும் ,முழுக்க முழுக்க Brass மற்றும் percussions யை மையப்படுத்தி வரும் பின்னணி இசை அதகளம் .

நந்தினியும் குந்தவையும் :
படத்தின் மிக முக்கியமான நிகழ்வாக தோன்றும் இந்த காட்சிக்கு ரஹ்மான் நமக்கு ஒரு ஆச்சர்யத்தை வைத்திருந்தார் , " தோடி " என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி ராகதை பயன்படுத்தி ஒரு பின்னணி இசையை கோர்த்து அதில் நகுல் அப்யங்கரை "சாய சஞ்சலே " என்று பாட வைத்திருப்பார் , இதற்கு முன் Delhi 6 படத்தில் Bhor bhayee என்ற பாடலில் இதே ராகத்தை பயன்படுத்தி இருப்பார் அதில் ஒரு உள்ளார்ந்த சோகம் கலந்திருக்கும் , ஆனால் இந்த காட்சியில் அப்படியே ஒரு வேறு வகையான உணர்ச்சியை கடத்தியிருப்பார் ரஹ்மான் . ரஹ்மான் மேஜிக்.

குந்தவை தேவியும் வந்திய தேவனும் :
இருவரும் சந்திக்கும் இந்த 6 நிமிட காட்சி ஒரு கவிதை போல் இருக்கும் . புராணத்தில் நடராஜரை காண சென்ற பதஞ்சலி முனி நந்தியால் அனுமதி மறுக்க பட்ட பொழுது ,  உடனே  முனி , நடராஜரை போற்றி பாடி நடராஜரின் தரிசனம் பெரும் அந்த நடராஜர் வரிகளை ரஹ்மான் வந்தியத்தேவன் குந்தவையை சந்திக்கும் காட்சியில் அழகாக மெல்லிசையோடு தொகுத்து வழகியிருப்பார் , போர்களமும் , அரசியலும் ,வஞ்சமும் கொண்ட கதையில் இந்த காட்சியை மணிரத்னம் ,ரஹ்மான் இருவரும் ஒரு கவிதையாக வடித் திருப்பார்கள் . காட்சியின் முடிவில் வரும் பின்னணியில் ஒலிக்கும் "அக நக " என்ற பாடல் அது ரஹ்மான் மேஜிக்.

சமுத்திர குமாரி பூங்குழலி :
கடலின் ராணியாகவே இருக்கும் பூங்குழலி அவளது உள்ளார்ந்த உணர்வுகளை ஒரு பாடலில் சொல்ல ரஹ்மான் பயன்படுத்திய ராகம் "சமுத்திர பிரியா"  திரை இசையில் மிகவும் அரிதாக பயன் படுத்த பட்ட ராகம் இது . இசை ஞானி இளையராஜா வின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் வரும் "கண்ணம்மா " பாடலில்  கடைசியாக கேட்டது . நெய்தல் நிலத்தில் வாழும் பூங்குழலியின்  உணர்சிகளை "அலைகடல் " என்ற மெல்லிசையோடு கடத்தி இருப்பார் தலைவன் ரஹ்மான்.


வானதியின் ஓலையும் அருண்மொழி வர்மனும் :
ஏழாம் நூற்றாண்டின் தேவாரம் தொகுப்பில் திருஞானசம்பந்தர் எழுதிய " காடுடை சுடலை நீற்றர் "பாடலில்   "காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்"  என்னும் வரிகளை அருண்மொழி வர்மன் வானதியின் ஓலையை படிக்கும் காட்சியில் இசை வடிவில் அழகாக வழங்கியிருந்தார் .

இறுதி காட்சி :
இறுதி சண்டை காட்சியில் வரும் பின்னணி இசை உலக தரம் , சண்டை முடிந்து வரும் பின்னணி பாடல் , பேரலைக்கு பின் காட்சியளிக்கும் கடல் போல மனதிற்குள் ஒரு அமைதியை நிலவச்செய்யும் .

படத்தின் OST காக காத்திருக்கிறேன் Rahman Sir.

Credits: Udhayan VP (Rahman Sir Fan)