Purchase @ Amazon

Tuesday, October 11, 2022

'உன்ன நினச்சதும்' பாடல் பற்றி கவிஞர் தாமரை கூறியது என்ன?

'உன்னை நினைச்சதும்' பாடல்

  வெந்து தனித்தது காடு படத்தில் நானெழுதிய இன்னுமொரு பாடல் இங்கே உங்களுக்காக.

   நான் பாடல் வரிகள் தருவதற்குள் பாடலின் காணொலியே இன்று வந்து விட்டதால் அதையே தருகிறேன். படம் பார்க்காதவர்கள் இதைப் பார்க்காமல் தவிர்க்கலாம். 
  
   நாயகியும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். மும்பைவாசி. வீட்டுசூழ்நிலை, நெருக்கடி, அன்பில்லாத நிலை எல்லாம் சேர்ந்து அவளைத் தனிமைப் படுத்தியிருக்கின்றன. நாயகன் தன்னைப் பின்தொடர்வது அவளுக்குத் தெரியும். அவன்மேல் காதலெல்லாம் இல்லை, ஆனால் இந்தக் காட்சியில்தான் அது மெல்லமெல்லத் தொடங்கும். என் வரிகள் அப்படித்தான் அமைந்திருக்கும். காட்சியை விட்டு விலகாமலிருக்கும். 

     கௌதம் கதை சொல்லும் போதே இப்படியொரு பாடல் வரும் என்று சொல்லியிருந்தார். இருவரும் பேசிக் கொள்வது போல் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இரவு நேரம் தொலைவில் எங்கிருந்தோ ஒரு பழைய பாடல் காற்றில் தவழ்ந்து வரலாம், அதை இவர்கள் தொடர்வது போல் வைத்தால் கவித்துவமாக இருக்குமில்லையா என்றார். பி.சுசீலா பாடல், பழைய பாடல் என்றதும் எனக்குக் கேட்கவா வேண்டும்... நான் ஏதேதோ கற்பனையில் விழுந்து எனக்குப் பிடித்த எண்ணற்ற பி.சு.பாடல்களை அடுக்க ஆரம்பித்தேன்... அதெல்லாம் இல்லை, கொடியசைந்ததும் தான் இரகுமான் சார் தேர்ந்தெடுத்திருக்கார், அதைப் பத்தி யோசிங்க என்றார்... (எனக்கும் அது பிடித்த பாடல்தான்)... 

  பிறகு கோவிட் வெருவி காலம்... யாரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இரகுமான் அவர்கள் திடீரென்று ஓரிரவு ட்சூம் வழியாக வந்தார், கௌதமும் இணைந்தார்... பேசிப்பேசியே பாடல் சூழல் உருவானது. எடுத்த எடுப்பிலேயே முத்தம் கேட்பது வேண்டாம் கௌதம் என்றேன், இல்லையில்லை பாடலுக்கு முந்தைய உரையாடலிலேயே அது வந்து விடும், எனவே தப்பாகத் தெரியாது என்றார். எனவேதான், 'மனசு மயங்கிதான் முத்தம் கேட்டது' என்று எழுதி, நாயகன் தடாலென்று முத்தம் கேட்ட அதிர்ச்சியை சமன் செய்தேன் 
   அதன்பிறகு என் வழக்கமான பல்லவியை இரகுமான் அவர்களிடம் ஆரம்பித்தேன், மெட்டு மறந்திரும், எனக்கு சரியா தத்தகாரத்தில போட்டு மெட்டு அனுப்புங்கன்னு...
   
    பிறகு அடுத்தநாள் பல்லவி மெட்டு மின்னஞ்சலில் வந்தது. நான் எழுதி அனுப்பி, பல நாட்களுக்குப் பிறகே சரணம் மெட்டு வந்தது.. கௌதமுக்கு நான் எழுதிய வரிகள் மிகமிகப் பிடித்திருந்தது. அப்படியே போய்ப் பதிவு பண்ணிருங்க என்றார்.

   அதன்பிறகு பல மாதங்கள் கழித்தே பாடல்பதிவு நடந்தது. வேறு சிலர் பாட, பதிவு செய்து அனுப்பினேன் ( இரகுமான் துபாயில், கௌதம் படப்பிடிப்பில் ). இறுதியாக மீண்டும் ஸ்ரேயா கோஷல், சர்தக் கல்யாணி பாடினார்கள். ஸ்ரேயா பாடியது எனக்குத் தெரியாது, இங்கு வந்து பாடினாரா அல்லது அவருடைய இடத்திலிருந்து பாடினாரா என்று தெரியவில்லை. பாடலை எனக்கு  உதவியாளர்கள் அனுப்பினார்கள். திருத்தங்கள் சொன்னேன், குறித்துக் கொண்டு சரிசெய்து மீண்டும் அனுப்பினார்கள். அவ்வளவு அழகாக இருந்தது. சர்தக் புதிய பாடகர், கோப்ராவில் 'தரங்கிணி' பாடியவர், தமிழ் தெரியாது, அவரோடு இரண்டு இரவுகள் தமிழ் சொல்லிக் கொடுத்து பாடல் பதிவு செய்து இரகுமான் அவர்களுக்கு அனுப்பினோம் (இரகுமான் இப்போது அமெரிக்காவில்). 
    ஆக, 10 மாதங்கள் விட்டு விட்டு நடந்தது இந்தப் பாடல் பணி. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

இனி பாடல் வரிகள் : 
Unnai Ninaichadhum Lyrics:

படம்  :           வெந்து தணிந்தது காடு
இயக்கம்  : கௌதம் வாசுதேவ் மேனன்
இசை     :     ஏ ஆர் இரகுமான் 
பாடல்  ஆசிரியர்  :      தாமரை 
பாடகர்கள்    :   ஷ்ரேயாகோஷல், சர்தக்
                                 கல்யாணி
நடிப்பு   :       சிம்பு, சித்தி இட்னானி
காட்சி   :       காதலை வெளிப்படுத்துதல்
தயாரிப்பு   :    வேல்ஸ் திரைநிறுவனம் 

முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் 

பல்லவி

ஆண் :

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே 
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !
 
பெண் : 

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே... 
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...
 
ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

பெண் ; 

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !
பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே ! 
நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் : 

நேசங்களால் கைகள் இணைந்ததே !
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !
தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..! 

ஆண் : 

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

சரணம்:

ஆண் :

மழை வருகிற மணம் வருவது 
எனக்கு மட்டுமா ? 
தனிமையில் அதை முகர்கிற சுகம் 
உனக்கும் கிட்டுமா ? 

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல் 
எனக்கு மட்டுமா ?
மழையென வரும் மரகதக்குரல் 
சுவரில் முட்டுமா ?

ஆண் : 

எனது புதையல் மணலிலே...
கொதிக்கும் அனலிலே !
இருந்தும் விரைவில் கைசேரும் 
பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே ! 
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ! 
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே..!

பி.கு :  

1.  இருபுறம் மதில் என்பதுதான்,  பாடும்போது ம கரைந்து'அதில்' என்று கேட்கிறது.  இந்தக் குறையை கவனித்து முன்பே வேறு வரிகள் எழுதிக் கொடுத்திருந்தேன். தடக்குரலில் அது இல்லாததாலும், ஷ்ரேயா பாடியது எனக்குத் தெரியாததாலும் முன்பிருந்த வரிகளை வைத்து படப்பிடிப்பு நடந்து விட்டதாலும் மாற்று வரிகளைப் பயன்படுத்த முடியவில்லை. 

2.  பொதுவாக இவ்வளவு விவரங்கள் முகநூல்  பதிவில் கொடுக்க மாட்டேன். பாடல்கள் வெற்றி பெற்றுள்ளதால் பலரும் பேட்டி கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்கும் சூழல் இல்லாததால் இங்கே சற்றே கூடுதல் தகவல்கள்... இரசிக நெஞ்சங்களை எண்ணி...

Credits: Kavingnar Thamarai 

No comments:

Post a Comment